கொல்லிமலை சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளதாவது : “நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்காகவும், கொல்லிமலைக்கு பயணிகளை அதிக அளவில் கவர்ந்திழுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.5 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள 2008 - 09 ம் ஆண்டில் மத்திய அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலை பகுதியில் சுற்றுப்புறங்களை மேம்பாடு செய்தல், இயற்கை காட்சிகள் மேம்பாடு செய்தல், பூங்கா மேம்பாடு, தடுப்புச்சுவர்கள் கட்டுதல், சுற்றுலா தலங்களுக்கு மின் விளக்கு வசதி செய்தல் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, திடக்கழிவு நீர் மேலாண்மை செய்தல், சுற்றுலா தொடர்பாக அமைக்கப்படும் நீர் விளையாட்டுகள், சாகச விளையாட்டுகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்படும் போக்குவரத்து வசதி ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன.
மேலும் ஒரு சுற்றுலா தலத்தில் இருந்து மற்றொரு சுற்றுலா தலத்திற்கு சென்று வருதல், சுற்றுலா தலங்களில் அமைந்துள்ள நினைவுச் சின்னங்களை மத்திய மாநில நிதிப்பகிர்வு 66:33 அதாவது 66 சதவீதம் மத்திய நிதியளிப்பின் கீழ் புதுப்பித்தல் மற்றும் சுற்றுலாவுடன் தொடர்புடைய செயல்பாடுகள் கொல்லிமலை பகுதியில் அதற்குண்டான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே, கொல்லிமலைப்பகுதியில் சுற்றுலா தலங்களை மேற்கொள்ள பகுதி-2 2008-09 திட்டத்தின் மூலம் மாநில அரசு மூலமாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணிகள் ஒப்பளிக்கப்பட்டு ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.” இவ்வாறு, ஆட்ரியர் சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.
ஏற்கனவே கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியை படிகட்டுகள் வழியாக இறங்காமல் மேலிருந்து கண்டு ரசிக்கும் வகையில் புதிதாக வியூ பாயிண்ட்டும், அரப்பளீஸ்வரர் கோயில் இளைஞர் விடுதி அருகேயும், சேலூர்நாடு, போலீஸ் ஒயர்லெஸ் கோபுரம் அருகில் மற்றொரு வியூபாயிண்ட்டும் என ரு.15 லட்சத்தில் 3 வியூ பாயிண்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
கொல்லிமலையில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Popularity: 59% [?]







